தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்காளத்தீஸ்வரர் - ஞானாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. 'தென் காளஹஸ்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ராகு - கேது பரிகாரங்கள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவும், அதைத் தொடர்ந்து கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், தெப்பக்குளத்தை ஒட்டியுள்ள கோவில் நிலங்களைத் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாகக் கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் கடந்த காலங்களில் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், சில சொத்துகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, திருக்காளத்தீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழாவை மீண்டும் நடத்த வேண்டும் மற்றும் கோவில் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் பக்தர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கோவிலில் கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஜெகநாத் மிஸ்ரா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கோவில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், இடிந்த நிலையில் உள்ள மைய மண்டபம், தெப்பக்குளத்திற்குப் பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் :

"சிவன் சொத்து குல நாசம் என்ற வகையில், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். புகழ்பெற்ற திருக்காளத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கோவிலுக்குச் சொந்தமாக 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய் நிலங்களும், ஏராளமான பிற சொத்துகளும் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதனை உடனடியாக மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, இக்கோவிலுக்குச் சொந்தமான கடைகள் அனைத்தும் முறைப்படி ஏலம் விடப்பட்டு, கோவில்வருவாயைப் பெருக்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்; அதற்கான முழு முயற்சியையும் நான் மேற்கொள்வேன்" என்று தெரிவித்தார்.
கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பு:
"ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா, ஆக்கிரமிப்புகள் காரணமாகப் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. எனவே, உடனடியாக மைய மண்டபத்தைச் சீரமைத்து, குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கோவிலில் தெப்பத் திருவிழா நடத்துவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும்" என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.