தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் காலில் விழுந்து ஆசி பெற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மலர் தூவி மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
இதேபோல் நம் நாட்டிற்காக சிறப்பாக பணிபுரிந்து விருது பெரும் வகையில் ராணுவ வீரர்களை உருவாக்கும் விதமாக அரசு பள்ளிகளில் உள்ளி விளையாட்டு மைதானங்களில் முன்னாள் ராணுவத்தினரின் உதவியோடு ராணுவ பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்ற ராணுவ வீரர், தனது வீர தீர செயலுக்காக இந்திய ஜனாதிபதியிடம் இருந்து 'கீர்த்தி சக்ரா' விருது பெற்றுள்ளார். அவருக்கு ஊர் பொதுமக்களும், தேனி மாவட்ட மக்களும் தொடர்ந்து மலர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று, காமயகவுண்டன்பட்டியில் உள்ள ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இல்லத்திற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்றார். அங்கு ராணுவ வீரருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, மலர் தூவித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன் பின், வீர சாகசம் புரிந்த அந்த ராணுவ வீரரின் காலில் விழுந்து சட்டமன்ற உறுப்பினர் ஆசி பெற்றார். உடனே அவரைத் தடுத்த ராணுவ வீரரிடம், "உங்களிடம் ஆசி பெறுவது எங்களுக்கும், இந்த மண்ணுக்கும் பெருமை" என்று சட்டமன்ற உறுப்பினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்குப் பொன்னாடை போர்த்தித் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இது குறித்துப் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர்: "நமது பகுதி மாணவ, மாணவிகளுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் அளவிற்குத் தரமான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். இந்தத் தொகுதியில் இருந்து இன்னும் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உருவாவதற்கு அரசுப் பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் முன்னாள் ராணுவத்தினரின் மூலம் ராணுவ பயிற்சி அளித்து அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருவேன்." என்று கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.