தேனி : குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் அமைந்துள்ள சோனைமுத்து கருப்பண்ணசாமிக்கு 49 ஆடு மற்றும் 29 சேவல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களைப் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பிரம்மாண்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடி மாதத் திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 4-வது ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்தன.
அதனைத் தொடர்ந்து, குச்சனூர் சனீஸ்வர பகவானின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு சோனைமுத்து கருப்பண்ணசாமிக்குச் சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காகச் சோனைமுத்து கருப்பண்ணசாமிக்கு 49 ஆடு 27 சேவல்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களைக் காணிக்கையாகச் செலுத்திப் பிரம்மாண்ட படையலிட்டு வழிபட்டனர்.
மேலும், விழாவில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் சேவல்களைக் கோவில் வளாகத்திலேயே சமைத்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானமாக வழங்கினர்.
இந்த விழாவில் குச்சனூர், சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.