தேனி- கம்பம்: தமிழகத்தில் இருந்து கேரளாவுடன் இணைக்கும் இணைப்பு சாலையான தேனி மாவட்டம் கம்பம் நகரில் செல்லும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு சாலையில் வாகனங்கள் செல்வதற்கு நெடுஞ்சாலை துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்

மாற்றுப் பாதையான குமுளி சாலையை பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர் .

தமிழக கேரளா எல்லையில் உள்ள  தேனி மாவட்டத்தில்  இருந்து கேரளா உடன் இணைக்கும் இணைப்புச் சாலைகளாக குமுளி கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு மலைச்சாலைகள் தமிழக மற்றும் கேரளாவை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது . 

அதன் ஒரு பகுதியாக கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் இணைப்புச் சாலையாக கம்பம் மெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது .

இந்தச் சாலையை பயன்படுத்தி நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்களும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் சென்று வருகின்றனர்.

18 கொண்டை ஊசி வளைவுகளுடன் கொண்ட இந்த மலைச்சாலை சேதம் அடைந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வந்தனர் .

 இந்நிலையில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து கடந்த மூன்று மாதங்களாக வடிகால் கட்டும் பணி மற்றும் தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் மிகவும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத வகையில் இருந்த 18 வது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள இருப்பதால் கம்பம் மெட்டு சாலை வழியாக  வாகனங்கள் சென்று வருவதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் நாளை எட்டாம் தேதி முதல் ஜூலை ஏழாம் தேதி வரை 30 நாட்களுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு நெடுஞ்சாலை துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் தடை விதித்துள்ளனர்.

மேலும் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் குமுளி மலைச்சாலை வழியாக சென்று வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

  கம்பம் மெட்டு சாலை வழியாக சென்று அங்குள்ள நெடுங்கண்டம் கட்டப்பனை மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்  சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் சென்று பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது .

 எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதிக்குச் செல்லும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பொதுமக்களும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர் .

Related

“சோழிங்கநல்லூரில் விசிக மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்! ”