தேனி மாவட்ட சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறிய தகவலின் பேரில், சிறைக் காவலர்கள் கதவைத் திறந்து அறைக்குள் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கைதிகள் காவலர்களை திடீரெனத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட இரண்டு காவலர்கள் சிறையின் அறை கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள் திடீரென அவர்களை கடுமையாக தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் இரு காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். 

இதையடுத்து அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு, இடுக்கி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதோடு, தப்பியோடிய 17 கைதிகளின் புகைப்படங்களும் அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு, அவர்களைப் பிடிக்க எல்லைப் பகுதிகள் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

சிறைச்சாலையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய 17 கைதிகளில் நேற்றிரவு மதுரை பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் விலக்கு பகுதியில் தேனி மாவட்டம் தேவாரம் சிலம்பரசன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.



 

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”