தேனி மாவட்டம் கம்பம் அருகே காமாய கவுண்டன்பட்டி சண்முக நதி அணை பகுதியில் புளிய மரத்தின் மீது கார் மோதி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயம்  அடைந்தனர். இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தேனி மாவட்டம் கம்பம்  மந்தையம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பிரதீப் (34),  கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முத்துக்குமார் (22), சந்திரன் (31), சிவகங்கையைச் சார்ந்த தர்ஷன் (34) ஆகியோர் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயத்தின் மூலம் நண்பர்கள் ஆனவர்கள்.

கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் நடைபெற உள்ள இவர்களது நண்பரான  அஜித் (ராணுவ வீரர் ) திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் இரவு வந்துள்ளனர். பின்னர் இந்த நான்கு பேரும் காரில் காமய கவுண்டன்பட்டி அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதிக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வரும் பொழுது காமய கவுண்டன்பட்டி சண்முகா நதி அணை சாலையில் வளைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து நேராக இருந்த புளிய மரத்தில் சென்று மோதி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிரதீப்குமார்

கார் மோதிய சத்தம் கேட்டு அருகே தோட்ட பகுதியில் காவலுக்கு இருந்தவர்கள் சென்று பார்த்த போது இரத்த காயங்களுடன் நான்கு பேரும் கிடந்துள்ளனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ராயப்பன்பட்டி காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உடன் சென்றுள்ளனர்.

அப்போது விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்த போது அதில் கம்பத்தைச் சார்ந்த பிரதிப் மற்றும் காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்த முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். படுகாயமடைந்த தர்ஷன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முத்துக்குமார்

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

Related

“காவல்துறை தடையால் இடமாற்றம் செய்யப்பட்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ”