தாம்பரம்: 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “வளமான யோகா! பசுமையான நாளை!” என்ற உயரிய நோக்கத்துடன் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், லிட்டில் டால்பின்ஸ் பூல் & ரிதம் ஸ்டுடியோ சார்பில் நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 4 வயது குழந்தைகள் முதல் 30 வயதுடையவர்கள் வரை 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரும் இணைந்து பல்வேறு யோகாசனங்களை இடைவிடாமல் 21 நிமிடங்கள் தொடர்ந்து செய்து உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் யோகநித்ராசனம், கோமுகாசனம், சசாங்காசனம், ஏக பாத சிரசாசனம் உள்ளிட்ட கடினமான யோகாசனங்களுடன், கண்களைக் கட்டிக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற சவாலான பயிற்சிகளையும் பங்கேற்பாளர்கள் நேர்த்தியாக செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, யோகா கலைஞர்கள் இணைந்து 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக பார்ட்னர் யோகா செய்து அசத்தினர். இதனை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
யோகாவுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் “யோகா – ஆரோக்கியம்; மரங்கள் – பசுமையான எதிர்காலம்” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை என். ரேவதி, நிறுவனர் மற்றும் இயக்குநர், லிட்டில் டால்பின்ஸ் பூல் & ரிதம் ஸ்டுடியோ, டி. கோபாலகிருஷ்ணன், இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு இயக்குநர், லிட்டில் டால்பின்ஸ் பூல் & ரிதம் ஸ்டுடியோ, மற்றும் கலைமாமணி ராஜகோபால், யோகா ஆசிரியர் ஆகியோர் சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தனர்.
நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் இந்திய இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர் சுகந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சாதனை முயற்சியை நேரடியாக ஆய்வு செய்தனர்.
நிகழ்வின் நிறைவில், சாதனை முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.