சிவகங்கை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிவகங்கையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை தெப்பக்குளம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட கட்சியினர், அரண்மனை வாசல் பகுதிக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, பாடை கட்டப்பட்ட பெம்மையை சாலையில் படுக்க வைத்து, அதற்கு மாலை அணிவித்து, 'பிணம்' போல் சித்தரித்து, நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பதாகக் கூறி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தில் பொதுமக்களும் அந்த பெம்மைக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள், "நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்", "பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்" என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். திடீர் சாலை மறியல் காரணமாக அரண்மனை வாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, போராட்டக்காரர்களை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, சாலை மறியலுக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போராட்டக்காரர்கள் அருகிலுள்ள காந்தி சிலை முன்பாகச் சென்று, அங்கும் பாடை கட்டப்பட்ட பெம்மையை 'பிணம்' போல் சித்தரித்து படுக்க வைத்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் அரண்மனை வாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டன.

Related

“தாய் கண்முன்னே அருணாச்சலத்தை அடித்துள்ளனர் - பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி”