சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு அரணத்தங்குண்டு பகுதியில், கடந்த 19 ஆண்டுகளாக வாடகை ஓட்டுக் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பாழடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் சுமார் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதால், பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். பலர் மதிய உணவை மட்டும் பெற்றுச் சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேறாததால், கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் தற்காலிக அங்கன்வாடி மையம் அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பணிகளையும் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்காலிக கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றதைத் தொடர்ந்து, பணிகளை நிறுத்துமாறு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அரணத்தங்குண்டு பகுதி மக்கள், சிங்கம்புணரியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) மங்களநாயகி அலுவலகத்தில் இல்லாததால், பிரச்சினைக்கு தீர்வு காண இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டு கொண்டதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.