சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே திருமணமாகி ஒர் ஆண்டே ஆன கர்ப்பிணி பெண் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் பெண்ணை வரதட்சனை கொடுமை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள மேலாயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி, மலர்கொடி தம்பதியர். இவர்களது மூன்றாவது மகள் தனலெட்சுமி. இவர் நர்சிங் முடித்த நிலையில் இவருக்கு வரன் பார்க்கப்பட்டு சிவகங்கை அருகேவுள்ள பாகனேரி கிராமத்தை சேர்ந்த கண்ணன், பஞ்சவர்ணம் தம்பதியரின் 30 வயது மகனான பாலசுப்ரமணியன் என்பவருக்கு கடந்த ஒர் ஆண்டுக்கு முன்னர் திருமணம் முடித்துள்ளனர். தனலெட்சுமி தற்சமயம் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கணவர் பாலசுப்ரமணியன் அவரது தாயார் பஞ்சவர்ணம் மற்றும் குடும்பத்தினர் தனலெட்சுமியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அந்த பெண் பாகனேரியில் உள்ள கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டபடி கிடந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருப்பதாகவும் அவரை கணவர் வீட்டார் கொலை செய்தே தூக்கில் தொங்க விட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே மானாமதுரை, சிவகங்கை சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.