சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பெருமளவில் சேதமடைந்து காணப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக அகற்றி புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வலுத்துள்ளது.
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

சில இருக்கைகளின் இரும்பு கட்டமைப்புகள் வெளிப்பட்டு காணப்படுவதுடன், சில இடங்களில் அமரும் பகுதி முற்றிலும் உடைந்து போயுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் நீண்ட தூர பயணிகள் பெரும் சிரமத்துடன் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் மற்றும் நீண்ட நேரம் பேருந்து காத்திருக்கும் பயணிகள் சேதமடைந்த இருக்கைகளில் அமர அச்சப்படுவதாகவும், பலர் தரையில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர். மேலும், சேதமடைந்த இருக்கைகள் காரணமாக விபத்து அபாயமும் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக அகற்றி புதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் பாலுவிடம் கேட்டபோது, பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள இருக்கைகள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக அவை விரைவில் புதுப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”