சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள புஷ்துதிக் கண்மாயை தனிநபர் ஒருவர் வங்கியில் அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, கண்மாயை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே காடனேரி கிராமத்தில் அமைந்துள்ள புஷ்துதிக் கண்மாயை தனிநபர் ஒருவர் வங்கியில் அடமானம் வைத்து ரூ.25 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிவித்து, அந்த கண்மாயை மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒருவர் தனித்துவமான முறையில் கோரிக்கை முன்வைத்தார்.
நெஞ்சில் கோரிக்கை பதாகை அணிந்தும், தாம்பூல தட்டு, ஆவணங்கள் மற்றும் பேனாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், பலமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து அலுவலகத்திலிருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்த அவர், புஷ்துதிக் கண்மாய் தொடர்பான விவரங்களை விளக்கி, அரசு நிலமாக உள்ள கண்மாயை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆட்சியரின் உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து, மனுதாரர் அதிகாரிகளுடன் கள ஆய்விற்குச் சென்றார். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.