சிவகங்கை : தமிழக முதலமைச்சர் விஜய் , சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. குழந்தைராணி மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜமோகன் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாகக் கூறி, திமுகவைச் சேர்ந்த வேங்கை பிரபாகரன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், திமுகவைச் சேர்ந்த தா. வேங்கை பிரபாகரன், தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர், சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தைராணி நாச்சியார் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ராஜமோகன் ஆகியோரை தரக்குறைவாகவும் ஒருமையில் குறிப்பிட்டும், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாகவும், நகராட்சி ஆணையரை இருக்கையில் இருந்து எழுந்திருக்கச் சொல்லி எம்.எல்.ஏ. அமர்ந்ததாக பொய்யான தகவலை வெளியிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும், தாமே அமருமாறு அழைத்ததாக நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழக அரசை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளையும் தனது பதிவுகளில் பயன்படுத்தி, அவை சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதால் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் தா. வேங்கை பிரபாகரன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”