சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று (28-06-2026) மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை ஒட்டிய சாலை உயர்த்தப்பட்டதால் மருத்துவமனை வளாகம் பள்ளமான பகுதியாக மாறியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து தேங்குவது தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது.

நேற்று பெய்த கனமழையால் மருத்துவமனை வளாகத்திற்குள் அதிகளவில் மழைநீர் தேங்கியது. இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் உள்ளேயும் வெளியேயும் செல்ல கடும் சிரமம் அடைந்தனர்.
எனவே, மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மானாமதுரை பகுதி மக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.