தீபாவளியை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. 30 கிலோ எடையுள்ள ஆடு ரூ.36 ஆயிரத்திற்கு விற்பனை – அதிகாலை 8 மணி வரை ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. 30 கிலோ எடையுள்ள ஆடு ரூ.36 ஆயிரத்திற்கு விற்பனையானதால் வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, வாத்து, கின்னிக்கோழி, வான்கோழி உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கான சந்தையும், அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கால்நடைகளை வாங்குவதற்காக வருகை தருகின்றனர்.
திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணல்மேடு, ஏனாதி, பெத்தானேந்தல், அல்லிநகரம், கீழடி உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கோழி, வாத்து வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இப்பகுதி கால்நடை வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வரும் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் கால்நடைகளைக் கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் அதன் விலை கணிசமாக உயர்ந்து ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல், 30 கிலோ எடையுள்ள ஆடு அதிகபட்சமாக ரூ.36 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒன்றரை கிலோ எடையுள்ள நாட்டுக்கோழி கடந்த வாரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.500 வரை விலை உயர்ந்தது. கின்னிக்கோழி மற்றும் வான்கோழிக் குஞ்சுகள் ஜோடி ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிகாலை முதல் காலை 8 மணி வரையிலேயே 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதுடன், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகளின் விலை உயர்ந்து விற்பனை அதிகரித்ததால் திருப்புவனம் வாரச்சந்தை வியாபாரிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.