சிவகங்கையில் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.எம். சுதர்சன் நாச்சியப்பனின் இல்லத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாணிக்கம் தாகூர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.எம். சுதர்சன் நாச்சியப்பன் திடீர் மறைவால் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர், சுதர்சன் நாச்சியப்பனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், சுதர்சன் நாச்சியப்பனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அவரது மறைவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாணவர் காங்கிரஸ் காலம் தொடங்கி, சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து காங்கிரஸ் இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் சுதர்சன் நாச்சியப்பன் என அவர் குறிப்பிட்டார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தலைவராக அவர் விளங்கியதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

"சுதர்சன் நாச்சியப்பன் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். அவரது அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும்."

அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பாக அமைந்துள்ளதாகக் கூறிய மாணிக் தாகூர், “எனது சித்தப்பாவைப் போல என்னை வழிநடத்தியவர்; அவர் வளர்த்த இயக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்றும் உருக்கமாக தெரிவித்தார்.

மறைந்த ஈ.எம். சுதர்சன் நாச்சியப்பனின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணியளவில் ஏரியூரில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

Related

“பொறியாளர் தின விழாவை முன்னிட்டு 70-க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்களுக்கு விருது!”