சிவகங்கை அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் ‘அதிரடி போட்டியாளர்’ ஆன தெருமாடு! முதலாவதாக ஓடி ரசிகர்களை கவர்ந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

சிவகங்கை அருகே நடைபெற்ற மாட்டுவண்டி எல்லை பந்தயத்தில், போட்டியில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்காத ஒரு மாடு சாலை ஓரத்திலிருந்து திடீரென ஓடி வந்து பந்தய வண்டிகளுடன் இணைந்து பாய்ந்த சம்பவம் பார்வையாளர்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

சிவகங்கை அருகே உள்ள பனங்காடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. ரோஸ்நகர்–தொண்டி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டி பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கிலோமீட்டரும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கிலோமீட்டரும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. இதில் பெரிய மாட்டுப் பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் சீறிப்பாய்ந்தன. அப்போது சாலை ஓரத்தில் நின்றிருந்த மாடு ஒன்று திடீரென பந்தய பாதைக்குள் நுழைந்து, போட்டியில் பங்கேற்ற மாடுகளுக்கு இணையாக தொடர்ந்து ஓடியது. சில நிமிடங்களில் அந்த மாடு முன்னணிக்கு சென்று, பந்தய இலக்கை நோக்கி முதலாவதாக ஓடிய காட்சி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

“பந்தயத்தில் வென்றது யார்?” என்ற கேள்வியை விட, “அந்த மாடு எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வியே அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிகம் பேசப்பட்டது. பலரும் அந்த காட்சியை செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

போட்டி நிறைவில் இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில், எதிர்பாராத விதமாக ‘போட்டியாளராக’ மாறிய மாடுதான் அனைவரின் மனதிலும் நீங்காத நினைவாக அமைந்தது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”