சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகை கண்மாய் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியால் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர் மதுரை மாவட்டம் தானத்துவம்புதூரை சேர்ந்த கனேசன் என்பது தெரியவந்துள்ளது. அவர் அருகில் உள்ள பசியாபுரத்தில் நேற்று நடைபெற்ற காதுகுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கீழடி அருகே கண்மாய் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.