சிவகங்கை: சிவகங்கை அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பிடித்ததில், லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்ததுடன் சுமார் 2 டன் அரிசி தீயில் கருகி நாசமானது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், காரைக்குடி அருகே மானகிரியில் இருந்து 30 டன் அரிசியை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு லாரியில் கொண்டு வந்தார். சிவகங்கை 48 காலனி பகுதியில் உள்ள கிட்டங்கியில் லாரியை நிறுத்தி அரிசி மூட்டைகளை இறக்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பகுதியில் தீப்பிடித்தது.

தீ வேகமாக பரவியதால், லாரி உரிமையாளரான செல்வராஜ் தீயை அணைக்கவும், அரிசி மூட்டைகளை பாதுகாப்பாக கீழே இறக்கவும் முயன்றார். எனினும், தீ மளமளவென பரவி லாரியின் முன்பகுதியை முழுவதுமாக சூழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், சுமார் 2 டன் அரிசி தீயில் கருகி வீணானது.

அரிசி ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”