சிவகங்கை, ஆக.1- சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.

மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”