சிவகங்கை, ஆக.2-
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 38 ஜோடி மாடுகள் பங்கேற்ற விருவிருப்பான போட்டியை வழி நெடுகிலும் பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டு பிரிவுக்கு 7 கிலோமீட்டரும், சிறிய மாட்டு பிரிவுக்கு 5 கிலோமீட்டரும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
காட்டாம்பூர், திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று போட்டியை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
போட்டி நிறைவில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.