சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூர் அருகே அரசு விரைவு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரையை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதேபோல், மதுரை மதிச்சியம் பகுதியில் இருந்து இடைக்காட்டூர் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சுமார் 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருப்புவனம் புதூர் அருகே வந்தபோது அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மதுரை மதிச்சியத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி கிருஷ்ணவேணி வயது 65 என்ற முதியவரும் அசோக் என்பவரது மகள் ரிவந்திகா என்ற 5 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த மற்றவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளதாவது: மதுரையில் இருந்து குடும்பத்துடன் ரிவிந்திகா குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு இடைக்காட்டூர் அய்யனார் கோவிலுக்கு செல்லும்பொழுது திருப்புவனம் புதூர் கிருஷ்ணன் கோயில் அருகில் ஆட்டோவும் அரசு பேருந்தும் மோதியதில் விபத்து ஏற்பட்டதில் ரிவந்திகா மற்றும் கிருஷ்ணவேணி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த நபரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம்பட்ட இரண்டு நபர்களை திருபுவனம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.