சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

 பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் வழிநெடுகிலும் ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் போட்டியிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலபசளை பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்த நிலையில் இரண்டு பேருந்துகளும் வேகமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்துகள் போட்டி போட்டு இயக்கப்பட்டதே விபத்திற்குக் காரணமா என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”