சிங்கம்புணரி அருகே மறைந்த தென்னை நாயகன் சேவுகப்பெருமாளுக்கு, விவசாயிகளின் வித்தியாசமான அஞ்சலி செலுத்தினர். 200 பேர் பேரணியாக வந்து மரக்கன்றுகள் நட்டு மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி சேவுகப்பெருமாள், தென்னை சாகுபடியை கிராமமெங்கும் பரப்பிய முன்னோடி விவசாயியாக அறியப்பட்டவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை நட்டு வளர்த்ததுடன், ஏராளமான விவசாயிகளை தென்னை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்தவர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

தென்னை சாகுபடி தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட நூல்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப குறிப்புகள் எழுதிய அவர், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மேலும் “நவீன வேளாண்மை” இதழை தொடங்கி, “கன்னிகா” என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி விவசாய உலகில் தனித்த இடம்பிடித்தார்.
மண்புழு உரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த சேவுகப்பெருமாள், தமிழக விவசாயிகளால் “தென்னை நாயகன்” என கௌரவிக்கப்பட்டதுடன், முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடமிருந்து நம்மாழ்வார் விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்த அவரது மறைவு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது நினைவைப் போற்றும் வகையில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காளாப்பூரில் பேரணியாக வந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் சேவுகப்பெருமாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மரக்கன்றுகளை நட்டு அவரது இயற்கை விவசாய கனவை தொடர உறுதிமொழி ஏற்றனர்.
உலக தென்னை தினம் செப்டம்பர் 2-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதனை ஒரு வார கால விழாவாகக் கொண்டாடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதன் தொடக்கமாக இன்று நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகள் மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
“ஒரு மனிதருக்கு அஞ்சலி செலுத்த பூக்களை மட்டுமல்ல, மரங்களையும் நட்ட விவசாயிகள்” என்ற இந்த நிகழ்வு, சேவுகப்பெருமாளின் விவசாயப் பணிக்கான மரியாதையை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.