சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே லாலா ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் பிரபல லாலா ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி வாங்கியுள்ளார். அதனை அன்று சாப்பிட்ட நிலையில், அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கடையில் சிவானந்தம் புகார் தெரிவித்தபோது, கடை நிர்வாகத்தினர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிவானந்தத்தின் உறவினர்கள் உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட லாலா ஸ்வீட்ஸ் கடைக்கு நேரில் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இனி இதுபோன்ற புகார்கள் வராத வகையில் உரிய உணவு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
பிரபல ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து அபராதம் விதித்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.