மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தனியார் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்து தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் ஏற்கனவே அரசு நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS) மற்றும் டீலக்ஸ் (Deluxe) அரசு பேருந்துகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தனியார் பேருந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலத்தில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் இன்றைய தினம் பேருந்து நிலையத்திலேயே இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

 மேலும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்டோர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கூடி, இலவச பேருந்து பயணத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ஏற்கனவே நகர பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் நகருக்குள் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் நட்டத்தை சந்திக்கின்றன. மேலும் ஓட்டுநர், நடத்துனர்களின் அன்றாட வருமானம் பாதிக்கின்றது. இந்த நிலையில் இந்தத் திட்டம் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் முற்றிலும் பாதிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அன்றாடம் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய படிக்காசும் பாதிக்கிறது. அரசின் இந்த திட்டத்தை ரத்து செய்து மகளிர் வாழ்வாதாரத்துக்காக மாற்று திட்டத்தை வழங்க வேண்டும். அல்லது அரசு பேருந்துகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு போல் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும் வழங்க வேண்டும் அல்லது தனியார் பேருந்து ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

மேலும் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது தமிழக முழுவதும் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, தங்களது சங்கத்தின் நிர்வாக கூட்டம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”