சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த குள்ளம்பட்டியில் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குள்ளம்பட்டி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சத்யராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருமாள், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் நவநீதக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது கடன் தள்ளுபடியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

கடந்த மே 25-ஆம் தேதி ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் ஜூன் 19-ஆம் தேதி வெளியான அறிவிப்பில் கடன் தொகைக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், முழுமையான கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினர்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறிய விவசாயிகள், இந்த நடைமுறையால் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய பயன் கிடைக்காது எனத் தெரிவித்தனர்.
எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.