அரசு துறையில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து நேரடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருள்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சேலம் கோட்டத்தில் சேலம் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் ஆகியவற்றை தலைமை இடமாகக் கொண்டு புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொருளாளர் மணிகண்டன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் முதலமைச்சரை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, தகுதியுள்ள இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related

“ஆணவக்கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி”