பழநி: பழநி முருகன் கோயிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் எஸ்.ரமேஷ், அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், திங்கட்கிழமை (இன்று) காலை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தார். அவரை, பழநி கோட்டாட்சியர் கண்ணன், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, பழநி - கொடைக்கானல் சாலையில் ரூ.53 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு வாயில் மற்றும் மேற்கு ரத வீதியில் ரூ.52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கால நந்தவனத்தை அமைச்சர் எஸ்.ரமேஷ் திறந்து வைத்தார்.

 

இதையடுத்து, ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, வின்ச் ரயிலில் செல்ல வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்து, பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பக்தர்கள் காத்திருக்கும் அறையில் நோய் பாதித்த நாய் இருந்ததை பார்த்து உடனே அப்புறப்படுத்த நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய வின்ச் ரயிலை இயக்காதது குறித்தும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். பஞ்சாமிர்தம் தயாரிப்பு மையத்தை ஆய்வு செய்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம், விற்பனையாகும் பஞ்சாமிர்தம் குறித்து கேட்டறிந்தார்.

 

இதற்கிடையே, அமைச்சர் ஆய்வுக்கு வருவது குறித்தும், அலங்கார நுழைவு வாயில் மற்றும் நந்தவனம் திறப்பு விழா குறித்து பழநி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரனுக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து அவரது ஆதரவாளர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உடனே அமைச்சர், எனக்கு கொடுக்கும் மரியாதையை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏவுக்கும் கொடுக்க வேண்டும் என கோயில் இணை ஆணையரிடம் கண்டிப்புடன் தெரிவித்தார்.

 

தொடர்ந்து, எம்எல்ஏ ரவிமனோகரனை சந்தித்து அமைச்சர் வருத்தம் தெரிவித்து அவரை சமாதானப்படுத்தினார்.

பின்னர், ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், அன்னதான கூடம், உணவு தயாரிக்கும் கூடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். மாலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

Related

“கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெயர் பலகை திறப்பு விழா: கம்பம் எம்எல்ஏ பங்கேற்பு”