புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, பள்ளத்துப்பட்டி கிராமத்தில் பொது இடத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த சாதி அடிப்படையிலான பேனரை அகற்றக் கோரி, அதே ஊரைச் சேர்ந்த சித்ரா என்பவரால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த பேனரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீரத்தையும், குல மரபையும் பெருமைப்படுத்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதுபோன்ற பேனர்கள் கிராமத்தில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி மற்றும் சட்டம்–ஒழுங்கு பாதிக்கக்கூடிய சூழலை உருவாக்கும் என்பதால், அதனை அகற்றக் கோரி மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண்குமார் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றக் கிளை அமர்வு, நீதியரசர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அனுமதியற்ற பேனர்களை அகற்றியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையும், பேனர் அகற்றப்பட்டதற்கான புகைப்படங்களுடன் கூடிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையும் பதிவு செய்தது.

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை முறையாகக் கடைப்பிடித்து பேனரை அகற்றிய அரசு அதிகாரிகளின் நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டியதுடன், வழக்கை முடித்து வைத்தது.

சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related

“முதல்வரின் லண்டன் பயணம் அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறத்தான் : என்.பி.ராஜா விமர்சனம்! ”