நரிக்குறவர் இன மக்கள் என்ற எண்ணத்தில் ஒருவேளை உணவளிக்க தயக்கம் காட்டி வந்த சமூகத்தில் இன்று அனைவருக்குமான உணவுப் பொருள்களை தயாரிக்க விவசாயத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூரில் மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் விளைநிலம் பெற்ற இவர்கள் விவசாயம் செய்வதற்கு RPM பெண்கள் நலசங்கம் பெறும் முயற்சி எடுத்து விவசாய உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

தமிழக அரசின் தாட்கோ மூலம்  மண்ணின் மகள் திட்டத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், தேனி, திண்டுகல், சேலம்  உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 58 பயனாளிகளுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பாண்டகப்பாடி கிராமத்தில் தலா 50 செண்ட் (அரை ஏக்கர்) என மொத்தம் 29 ஏக்கர் 50 செண்ட் விளைநிலம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள பெண் விவசாயிகள் பாரதி காடு பழங்குடி பெண்கள் கூட்டமைப்பு என்று தொடங்கி தற்பொழுது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மகளிரின் விவசாய முன்னெடுப்பை வரவேற்கும் விதமாக இந்திய மாதர் சங்கத்துடன் இணையப் பெற்ற RPM பெண்கள் நலசங்கம் சார்பில் விளைநிலம் பெற்ற நரிக்குறவர் பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கான உபகரணங்களை அளித்த தன்னார்வ அமைப்பினரை வரவேற்று நரிக்குறவர் அமைப்பினர் பாசி மணி மாலைகளை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களது விளைநிலங்களில் நிகழ்ச்சியின் நினைவாக  மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை பதிவு செய்ய வந்த செய்தியாளரிடம் இவ்விழா குறித்து ஆர்பிஎம் அமைப்பினர் பேசுகையில் பெண்களுக்கான நல அமைப்பை தொடங்கி 25 ஆண்டுகளை கடக்க உள்ள நிலையில் சமூகத்தில் இதுபோன்று முன்னேற துடிக்கும் மக்களுக்கான நல உதவிகளை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பாக நரிக்குறவர் சமூகத்தின் பெண்கள் விவசாயம் சார்ந்து  தங்களை மேம்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றானது என்றும் தெரிவித்தனர்.

இதோடு நின்று விடாமல் இந்த விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்வதற்காக இந்த தன்னார்வ அமைப்பு செயல்படும் எனவும் தற்போது இவர்களுக்கு உபகரணம் வழங்கியதுடன் விவசாயம் சார்ந்த முறையான பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அமைப்பு சார்பில் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”