பெரம்பலூரில் இஸ்லாமிய சிறுவர்- சிறுவர்களுக்கான மாவட்ட அள விலான திருக்குர்ஆன் ஒப்புவித்தல் போட்டி 3 பிரிவுகளாக துறை மங்கலத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. 

விழாவிற்கு முன்னாள் வக்ப் வாரிய தலைவரும், தொண்டு நிறுவன தலைவருமான அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. சிவக்குமார் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஐக்கிய ஜமாத் முன்னாள் தலைவர் சுல்தான் இப்ராகிம் வரவேற்றார். விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச் சர் ஷாஜகான் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஷாஜகான் ‘தவெக கட்சி தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில்தான் நாங்கள் இந்த அரசோடு இணைந்து பயணிக்கிறோம்.  எங்களை சோபா மாடல் என்றெல்லாம் அழைக்கிறார்கள் இறைவன் மீது ஆணையாக நாங்கள் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் தான் இந்த ஆட்சி நடைபெறுவதற்கு உதவி செய்தோம் எங்கள் மீது வீண் கற்பனை செய்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள், மிக நேர்மையாக இருப்பவர். யாரும் எங்கள் மீது அவதூறு  பரப்ப வேண்டாம்’ என்று அமைச்சர் ஷாஜஹான் கேட்டுக் கொண்டார்.

தலைமை உரையாற்றிப்  பேசிய வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் அப்துல் ரஹ்மான்  ‘திருக்குரான் என்பது முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து சமூகத்துக்குமானது. எனவே எல்லோரும் அதை வாசிக்க வேண்டும். மேலும் முகமது நபி அவர்களும் முஸ்லிம்களுக்கானவர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் ரஹ்மத்துல்லாலமீன்  பொதுவானவர்’ என்றார்.

நிகழ்ச்சியில் அரியலூர் தொழில் அதிபர் அக்பர் ஷரீப், பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் முகம்மது முனீர், இஸ்லாமிய அரபிக்கல்லூரி முதல்வர் இஹ்சானுல்லா, மாவட்ட அரசு தலைமை காஜி அப்துல் சலாம் தாவூதி, முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுனர் ஷேக்தாவூத் உள்பட பலர் பேசினார்கள். விழாவில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஆலீம்கள் கலந்து கொண்டனர். விழாவிற் கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்ராருல் ஹக், விழா ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எஸ். எஸ்.சுல்தான் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”