நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா கிருஷ்ணன்புதூர் கிராம மக்கள் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 60 வீடுகள் உள்ளன. 5 வருடங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஊராட்சியின் சார்பில் எங்கள் ஊரில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செயல்படும் முன்னரே அதில் பொருள்கள் மற்றும் மோட்டாரை ஊராட்சியின் சார்பில் கழற்றி சென்று விட்டார்கள். நாங்கள் பல ஆண்டுகாலமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து எங்கள் ஊருக்கு எதிரே உள்ள குழாயில் ஆற்று நீர் பிடித்து குடித்து வந்தோம். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக அதிலும் தண்ணீர் வரவில்லை.

அதனால் ஊரில் எங்களுக்கு குடிக்க குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். ஊருக்குள் உப்பு தண்ணீர்தான் குழாயில் வருகிறது.

 அதனை குடிப்பதால் குழந்தைகள், முதியவர்களுக்கு குடிநீர் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. மேலும் பலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்படுகிறது. நாங்கள் குடிதண்ணீர் கேட்டு பலமுறை ஊராட்சி தலைவரிடமும், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு கொடுத்தும் நேரில் சென்று முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

குடி தண்ணீர் வேண்டுமென்றால் நாங்கள் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருமாள் நகரில் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டி உள்ளது. அங்கும் எப்போது தண்ணீர் வரும் என்று தெரியாத காரணத்தால் நாங்கள் வேலைக்கும் செல்ல முடியாமல் தண்ணீரும் பிடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே எங்கள் ஊருக்குள் குடிப்பதற்கு குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”