மேட்டூர் அணை திறப்பு ஒரு தேவையற்ற விளம்பர நடவடிக்கையாகும்.  முதலமைச்சரின் செயல்பாடுகள் மக்கள் நலனை நோக்கியதாக இல்லாமல், ஒரு திரைப்படப் படப்பிடிப்பு போல் உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நெல்லையில் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலி தேவரின் 311 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் செல்வதற்காக நெல்லை வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

மேட்டூர் அணையைத் திறந்தது குறித்துப் பேசிய அவர், இது ஒரு தேவையற்ற விளம்பர நடவடிக்கை விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்தாலோசனை செய்த பிறகே அணை திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுத்திருக்க வேண்டும். டெல்டா பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியைச் சமாளித்து விவசாயம் செய்ய வேண்டுமானால், தொடர்ந்து 25 முதல் 30 நாட்களுக்குத் தண்ணீர் வர வேண்டும். 

தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை. இது வெறும் விளம்பரத்திற்காகச் செய்யப்பட்ட ஒன்று. மேலும், முதலமைச்சரின் செயல்பாடுகள் மக்கள் நலனை நோக்கியதாக இல்லாமல், ஒரு திரைப்படப் படப்பிடிப்பு போல் உள்ளது. தவெக  அரசு தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், தற்போது நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்  மூலம் மக்களை ஏமாற்றும் இந்த அரசு, தவணை முறையில்  கூட தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  

பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டிகளில், வழக்கமான 8 முழ வேட்டிகளை 4 முழமாகப் பாதியாகக் குறைத்து நயவஞ்சகம் செய்துள்ளனர். மேலும், இவை தமிழக நெசவாளர்களிடம் இருந்துதான் வாங்கப்படுகிறதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. தாலிக்கு தங்கம்' திட்டத்திற்கான தங்கத்தை வாங்குவதற்கான ஆர்டர்களைக் கேரள நகைக் கடைக்காரர்களுக்குக் கொடுத்துள்ளனர். 

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியப் பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இத்தங்கம் பாரத ஸ்டேட் வங்கி  போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து முறையாகப் பெறப்பட்டது. அவையில் பலமுறை சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாகவும் இருந்த அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுங்கட்சியினர் சிறுபிள்ளைத்தனமாக ஏளனம் செய்கின்றனர். 

ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வம்புக்கு இழுப்பதையும், ஏளனம் செய்வதையும் நேரடி ஒளிபரப்பில் காட்டிவிட்டு, அதற்கு எதிர்க்கட்சியினர் அளிக்கும் தகுதியான பதில்களைச் சபாநாயகரைக் கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகின்றனர். இந்தத் தொகுப்புகளைத் தங்களுக்குச் சாதகமாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். 

முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு பட்ஜெட் எண்களைக் கூடச் சரியாக வாசிக்கத் தெரியவில்லை. அவையில் '7,930 கோடி' என்ற தொகையை '7,093 கோடி' என்று தவறாக வாசித்துத் தடுமாறுகின்றனர். 

கப்பலோட்டிய தமிழன், பூலித்தேவர், வீரன் அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன் போன்ற மாவீரர்களின் பாரம்பரியத்தில் வந்ததாகக் கூறும் இவர்கள், அடிப்படை நிர்வாகத் திறனோ, தொலைநோக்குப் பார்வையோ இன்றி வெறும் சினிமா கற்பனையில் ஆட்சி நடத்துகின்றனர். சட்டமன்றத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தவெக அரசின்  தவறான செயல்பாடுகளுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. வெறும் 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், தவெக  தலைவரைப் பிரதமர் வேட்பாளர் போல சித்தரிக்கிறீர்கள்  காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர்  டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியிடம் இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  

தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் ஆளுங்கட்சி அமைச்சர்களின் விளக்கங்கள் மிகவும் கேலிக்குரியதாக அவையில் அமைந்துள்ளன.

100 நாள் சாதனையில் முதலமைச்சரின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், அவர் அவையில் கடைப்பிடித்த மௌன விரதம்தான். இதைப் பெரிய வியூகம்  என்று அவர்களது தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், எண்களைச் சரியாக வாசிக்கத் தெரியாமல் அவையில் அவமானப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினாலேயே அவர் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.

நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு தமிழக அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் ,  இது பணம் கொடுத்து எழுதப்பட்ட பொய்ப் பிரச்சாரம் என்றும், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய போலிச் செய்திகளை ஊடகங்கள் மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.  

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் நிலையில், சினிமாவில் 100 பேரை அடிப்பதை வைத்து நிஜ வாழ்க்கையிலும் சாதித்துவிடலாம் என்ற சினிமா மாயையில் விஜய் போன்றவர்கள் அரசியல் களம் காண்கின்றனர். இளைஞர்களும், பெண்களும் இத்தகைய சினிமா கவர்ச்சியைக் கண்டு ஏமாறக் கூடாது. கட்சி மாறித் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். 

கட்சி மாறியவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மக்கள் தற்போது விழிப்புணர்வு பெற்று, விளம்பர அரசியலில் இருந்து மாற்றத்தை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர் என்று  கூறினார்.

Related

“காவல்துறை தடையால் இடமாற்றம் செய்யப்பட்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ”