ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம், சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அமைச்சர் லோகேஷ் மற்றும் மரிய வில்சன் கூட்டாக பேட்டிளித்தனர்.

திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டி வீரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அவரது நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் மற்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்று ஒண்டிவீரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லோகேஷ், “ஒண்டிவீரனார் எங்கள் சமூகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரராக கருதப்படுகிறார். அவரது நினைவு நாளில் அரசு சார்பில் வந்து வீர வணக்கம் செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் உத்தரவின் பேரிலேயே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்” என்றார்.

மேலும், முதலமைச்சர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும், அந்த சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தன்னைப் போன்றவர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை மட்டுமின்றி செய்தி மற்றும் விளம்பரத்துறை, கல்வித்துறை, உயர்கல்வித்துறை போன்ற முக்கியமான துறைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒண்டிவீரனார் நினைவிடத்திற்காக ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள்தான் ஆகிறது. இது எனது முதல் வீர வணக்க நாள். நீங்கள் அடுத்த ஆண்டு இங்கு வரும்போது இதுகுறித்து கேள்வி கேட்கலாம். தற்போது இந்த விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்வேன்” என உறுதியளித்தார்.

திராவிட இயக்கம் இதுவரை செய்யாத வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறதா என கேட்கப்பட்டபோது, 8 பேருக்கு அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதே அதற்கான முக்கிய எடுத்துக்காட்டு என அமைச்சர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த சமூகத்தினரின் உண்மையான மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரிய வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் முடிவுகள் வந்த பிறகு, அந்த சமூகத்திற்கு உண்மையில் எவ்வளவு பிரதிநிதித்துவம் தேவை என்பது தெரியவரும். அது 5 சதவீதமாக இருக்கலாம், 6 சதவீதமாக இருக்கலாம்; முடிவுகள் வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பத்திரப்பதிவுத்துறையில் ஆவணங்களுக்கு வண்ண நூல் கட்டி வகைப்படுத்தி பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “அப்படி எதுவும் இல்லை. பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் லஞ்சத்தை முழுமையாக ஒழித்துக் காட்டுவோம்” என அமைச்சர் தெரிவித்தார். எனினும், பத்திரப்பதிவுத்துறையில் இதுவரை எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான கேள்விக்கு, “இன்று நாங்கள் ஒண்டிவீரனாருக்காக வீர வணக்கம் செலுத்த வந்துள்ளோம். அது தொடர்பான கேள்விகளை மட்டும் பேசுவோம்” என அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக, மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த கோரிக்கையின் அடிப்படையிலேயே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முன்வைத்த கோரிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கார் உள்ளிட்ட வசதிகளுக்காக சுமார் ரூ.2.10 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாகவும், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் தொகை வழங்கப்படுவதாகவும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு அமைச்சர், “உங்கள் யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இன்று பேச வேண்டிய விஷயம் ஒண்டிவீரனார் நினைவு நாள்” என பதிலளித்தார்.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து பேசிய அமைச்சர், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். வருங்காலங்களில் பல்வேறு முக்கியமான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும், அவற்றை ஏற்கனவே சட்டமன்றத்திலும், அறிவிப்புகளிலும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் கடன் தொடர்பான விகிதங்களை குறைத்து வருவதாகவும், வருவாய் பற்றாக்குறையையும் குறைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக முதல் காலாண்டு புள்ளிவிவரங்களிலேயே இதற்கான முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது என்றும், “எல்லாமே சிறப்பாகத்தான் சென்று கொண்டிருக்கிறது; கவலைப்பட வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.

மேலும், நீர்வழித்துறை உள்ளிட்ட சில துறைகளில் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகவும், நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் உரிய தீர்வை கொண்டு வருவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். “கடந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியாத பல விஷயங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வரப்போகிறது. வருங்கால நாட்களில் அதனை நீங்கள் பார்ப்பீர்கள்” என அவர் கூறினார்.

இதனிடையே, அரசு பேருந்தில் பயணம் செய்வது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்த நிலையில், ஒண்டிவீரனார் நினைவு தின நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட சந்திப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசின் பிரதிநிதித்துவம், சாதிவாரி கணக்கெடுப்பு, பத்திரப்பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாகன வசதி மற்றும் தமிழகத்தின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விவாதமாக அமைந்தது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”