திருநெல்வேலி, ஜூலை.2- காவிரி நீர் தமிழகத்திற்கு வராமல் இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மெட்ராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் இருந்து எடுத்த சரத்தே காரணம். கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் தருவதை மாநில அரசுகள் நிறுத்தம் என்றால் அணைகளின் செயல்பாட்டை மத்திய அரசு எடுத்து நடத்த வேண்டும் என நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
நெல்லையில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை தெரிவித்துள்ளார். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறியிருப்பது உண்மையல்ல. பொதுமக்களிடமிருந்து அவ்வாறு எந்தப் புகாரும் வரவில்லை. மாறாக, மின்கட்டண உயர்வு தொடர்பாக நிர்வாக ரீதியாக தானாக முன்வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுழற்சி முறையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் இணைப்புகள் ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10 ஆயிரம் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் கிடைத்த தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதனை அவர் திரும்பப் பெற வேண்டும்.
மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கட்டண புகார்கள் வந்துள்ளன, யாரும் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தவறான தகவலை பரப்பி வருகிறார். நேற்று ஆய்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் இணைப்புகளில், 50 இணைப்புகளில் மட்டுமே கட்டண மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும், வீடுகள் பூட்டப்பட்டிருந்த காரணத்தினால் ஏற்பட்ட மாற்றமே தவிர வேறு காரணம் இல்லை.
வழக்கமாக கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகவே கோடை காலம் முடிவடைந்த பிறகு மின் நுகர்வு அதிகரிப்பால் கட்டண உயர்வு காணப்படுவது வழக்கமாக உள்ளது. சமூக வலைதளங்களில் வரும் தகவலை அடிப்படையாகக் கொண்டு 3 லட்சத்து 70 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன என்று தவறாக தெரிவிக்கக் கூடாது.
இந்த ஆய்வுப் பணியை அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பிரித்து வழங்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நேற்று எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை இன்று வெளியிடப்படும்.

தனிப்பட்ட புகார்கள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப்பில் வரும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஒருவர் இதுபோன்ற தகவல்களை பரப்பக் கூடாது. மக்கள் மத்தியில் எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புகொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் எந்தத் தெளிவும் இல்லாமல், யார் சொல்வதை கேட்டோ அதில் கையெழுத்திட்டு செயல்பட்டார். இப்போதும் அதேபோன்று செயல்பட வேண்டாம். அனைவருக்கும் விளக்கம் அளிப்பது எங்கள் கடமை. பொதுமக்கள் நலன் கருதியே இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அச்சப்படும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடக் கூடாது.
மின்வாரியத்தில் பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே மின்வாரியத்தில் பணியமர்த்தியுள்ளனர். குறிப்பாக, மின் கட்டண கணக்கெடுக்கும் பணியாளர்களை நியமிக்கவில்லை. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நோக்கியே அவர்கள் கொள்கை ரீதியாக செயல்பட்டனர்.
மின் கட்டண கணக்கீடு மற்றும் பிற களப்பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்கும் பணியை தற்போதைய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
காவிரி விவகாரம் தொடர்பாக, சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான் தண்ணீரைப் பெற்றுத் தர ஒரே வழி. கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது நமக்கு இருந்த வலுவான சட்டப்பிடியை இழந்துவிட்டோம். சென்னை ராஜதானி – மைசூர் ஒப்பந்தத்தின் பலனையும் இழந்தோம். மேலும், தீர்ப்பாய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்றால், அணையின் செயல்பாட்டை ஆணையம் கைப்பற்றி தண்ணீரை திறக்கலாம் என்ற விதியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நீக்கிவிட்டார். திமுக செய்த தவறுகளுக்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவதுதான்.

வேறு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை முதலமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வார். தற்போதைக்கு சட்டரீதியாக போராடுவதுதான் ஒரே வழி. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கூட கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் பிரதிநிதிகளும் பேசுவது கண்டனத்திற்குரியது.
சட்டரீதியாக உச்சநீதிமன்றம் மூலமாக காவிரி விவகாரத்தை அணுகுவதுதான் சரியான வழிமுறை. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதுகூட தீர்ப்பாயத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 2018 வரை கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், பாஜக ஆட்சி இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில்தான் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். இரு மாநிலங்களுக்கிடையேயான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு சரியான முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் காவிரி விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி சொன்னால் தண்ணீர் வந்துவிடும் என்று கூறும் அன்புமணி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோதுகூட தீர்ப்பாயத் தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலையில் இருந்ததை நினைவுகூர வேண்டும்.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து முதலமைச்சர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார். "காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது" என்று கர்நாடக அரசு கூறியபோதும், சட்டரீதியான முயற்சிகளையே மேற்கொண்டோம். இப்போதும் அதே வழிமுறையையே தமிழக அரசு பின்பற்றும் என்று தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.