திருநெல்வேலி சந்திப்பு அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பட்டப்பகலில் கூலித்தொழிலாளி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (33). பெயிண்டராக வேலை செய்து வந்த இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று பாஸ்கர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இரண்டு பேர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, கொலையாளிகள் பாஸ்கரின் தலையை துண்டித்து, சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்று வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், பாஸ்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவர், அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் என்ன? சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவத்தால் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கூலித்தொழிலாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது தலையை துண்டித்து சுமார் 200 மீட்டர் தூரம் கொண்டு சென்று வீசிய சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”