நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மத போதகருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). மத போதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்துள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 4 சிறுமிகளுக்கு மத போதகர் ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, சாட்சிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை இன்று முடிவடைந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, மத போதகர் ஆபிரகாம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.