அண்ணாமலை இயக்கத்திற்கு மோடி, அமித் ஷா ஆசீர்வாதம் இல்லை” – நயினார் நாகேந்திரன்  விளக்கம்

பாஜகவில் இருப்பவர்கள் வேறு இயக்கத்தில் இருக்க முடியாது” – அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு நயினார் எச்சரிக்கை

அண்ணாமலை வெளியேறியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.” "தமிழகத்தில் பாஜகவே ஆளுங்கட்சிக்கு நேரடி போட்டி; கட்சி பலமாகவே உள்ளது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி ‘வீ லீடர்ஸ்’ (We Leaders) என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது பாஜக தேசிய தலைமையின் எந்தவித ஆசீர்வாதமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி என்பது தனிநபர்களை மையமாகக் கொண்ட இயக்கமல்ல; தேசம் மற்றும் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி என்றும் அவர் கூறினார். கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறி மீண்டும் கட்சிக்குத் திரும்பிய வரலாறு உள்ளது. ஆனால் கட்சியை விட்டு வெளியேறி தனித்துச் செயல்பட்டு வெற்றி பெற்றதாக எந்த முன்னுதாரணமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட நயினார் நாகேந்திரன், “பாஜகவில் இருப்பவர்கள் பாஜகவில் மட்டுமே இருக்க முடியும். ஒரே நேரத்தில் வேறு இயக்கத்திலும் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்துடன் தொடங்கியதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு நபர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு அவருக்கு கட்சித் தலைமையின் ஆசீர்வாதம் இருப்பதாக கூற முடியாது” என்று பதிலளித்தார். மேலும், கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், அவர்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் மீண்டும் பாஜகவில் சேரலாம் என்றும் தெரிவித்தார். தவறான வழிகாட்டுதலால் சிலர் சென்றிருக்கலாம் என்றும், அவர்களை மீண்டும் கட்சிக்கு வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அண்ணாமலை கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறியிருப்பது குறித்து பதிலளித்த அவர், முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பங்கேற்ற அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்காற்றியதாகவும், 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஹெலிகாப்டர் மூலம் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்ததாகவும் நினைவுபடுத்தினார். கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால் அப்போதே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். பாஜகவின் வாக்கு வங்கி குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். “பாஜக தமிழ்நாட்டில் வெறும் 2 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது என்ற கருத்து தவறானது. 2024 மக்களவைத் தேர்தலில் 11 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். மேலும் அண்மையில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு சுமார் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எனவே கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்றார்.

பாஜக பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுவதை மறுத்த அவர், “உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக. இந்திய அளவில் ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களும், 270-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்திலும் பாஜக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது” என்று தெரிவித்தார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடரும் என்றும், கட்சியில் எந்தவித உள்கட்சி பிரச்சினையும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும், ஜூன் 8-ஆம் தேதி திருச்சியில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல், பிரதமர் மோடியின் தமிழகத்திற்கான சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல், சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தயாரிப்புகள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலை எழுதிய “வணக்கம் தமிழகம் – பிரதமர் மோடி” என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டிய நயினார் நாகேந்திரன், “தமிழர்களுக்காக மோடி, தமிழகத்திற்காக மோடி, இந்தியாவிற்காக மோடி; படிப்படியாக ஆனால் நிச்சயமாக மோடிக்காகத் தமிழகம்” என்று அவர் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி, அதுவே தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும் என்றார். இறுதியாக, “பாஜக தொண்டர்கள் யாரும் தவறான தகவல்களை நம்பி கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். சென்றவர்கள் திரும்பி வர விரும்பினால் வரலாம். பாஜக தொடர்ந்து வலுவாக செயல்படும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Related

“தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு”