சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி:
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைபாட்டை வரும் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேற்றைய தினம் (04.06.2026) உத்தரவிட்டுள்ளது. இது கவலை அளிக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென வலது சாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்புறுத்தி மோதல் நிலையை உருவாக்கி வருகின்றனர்
நீதிமன்றத்திலும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அந்த சர்வே தூண் நடுவதற்கு முன்பிருந்தே அப்பகுதியில் சிக்கந்தர் தர்கா இருந்து வந்துள்ளது.
அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளின் மூலம் அந்த தர்காவை எதிர்காலத்தில் அகற்றிட வேண்டும் என்று அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு, மத நல்லிணக்கத்தை சீர்க்குலைத்து, மக்களை மத ரீதியாக அணிதிரட்டி, பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே வலதுசாரி சக்திகளின் நோக்கமாகும். வலதுசாரி சார்புள்ள சில நீதி அரசர்களும் இந்நோக்கத்திற்கு துணை நிற்பது நீதி பரிபலான முறையில் ஏற்பட்டுள்ள பேராபத்தாகும் என்பதை, மதச்சார்பற்ற கொள்கை வழி அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தை பயன்படுத்தி, அரசியல் சட்டத்திற்கு முரணான தங்களது தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் மூலம் சர்வே தூணில் தீபம் ஏற்றலாம் என்ற கருத்தை அடிப்படையிலேயே நிராகரிக்க வேண்டும்.
இத்தகைய முயற்சி நமது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும்.
அது மட்டுமல்ல, 1991 வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 க்கு எதிரானதாகும்.
இச்சட்டப்படி, 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். 1947 ஆகஸ்டு 15-க்கு முன்னர் வழிப்பாட்டு தலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், வரும் காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.
வலதுசாரிகள் மற்றும் வலது சாரி சார்புடைய நீதியரசர்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் சட்ட ஒழுங்கையும், மதச்சார்பற்ற கொள்கை நிலையில் நின்று, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும். இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில், சிக்கத்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
என மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.