கிருஷ்ணகிரி:  விரைவில் பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலக வாசலில் கூட செந்தில் பாலாஜி வந்து நிற்பார் என மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதின் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

முதல்வர் விஜய் கரூர் பயணம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்த நிலையில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்: சட்டமன்ற தேர்தல் பரபரப்புரையின் போது கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி மீது அன்றைய திமுக அரசு பழி சுமத்தியது. கரூரில் திட்டமிட்டு சதி வலையை பின்னி வைத்து அதில் தளபதியை கரூர் கம்பெனி முதலாளி சிக்க வைத்தார். இந்த உண்மை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளி வர தொடங்கி இருக்கிறது. 

சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்ட மக்கள் திமுகவின் சதியை உணர்ந்து விட்டனர். இதன் காரணமாகவே கரூரில் தனது மாயஜால வித்தை எல்லாம் பலிக்காது என கோவை மாவட்டத்திற்கு செந்தில்பாலாஜி ஓடினார். மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறைகளின் அமைச்சராக செந்தில்பாலாஜி செய்த தில்லுமுல்லு வேலைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றன.

எங்கே சிறைக்கு சென்று கம்பி எண்ண போகிறோம் என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டத்தை அறிவாலய துணையுடன் தீட்டியிருக்கிறார். ஆட்சி கவிழ்ப்பு விஷயத்திலும் வசமாக சிக்கிய கரூர் கம்பெனி முதலாளி அவரது தம்பி சிறைக்கு செல்வதில் இருந்து தப்பிக்க இன்று வரை ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். 

இந்த நிலையில் தான் நேற்றைய தினம் கரூர் சென்ற முதலமைச்சர் அவர்கள் அம்மாவட்ட மக்களிடம் தனது மனவேதனையை பகிர்ந்து இருக்கிறார். "என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையான சம்பவத்தை அடுத்து வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இனி இப்படியொரு அரசியல் சதியை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக அமைக்கப்படும்" என கவலையுடன் பேசி இருக்கிறார். 

முதல்வரின் மனவேதனையை கரூர் மக்கள் மட்டுமில்லாது தமிழக மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால் கரூரில் முதல்வர் பேச்சை விமர்சனம் செய்து செந்தில் பாலாஜி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். செந்தில்பாலாஜியின் இந்த செயல் ஒட்டுமொத்த கரூர் மக்களையும் இழிவுப்படுத்தும் செயல் ஆகும். பல கட்சி மாறும் பச்சோந்திகளுக்கு மக்களின் வேதனை பற்றி தெரிய வாய்ப்பில்லை. மதிமுக, அதிமுக, அமமுக, திமுக என கரை வேட்டிக்களை கட்சி வாசலுக்கு சென்று மாற்றி கொள்ளும் செந்தில்பாலாஜி போன்றவர். தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைவரும், முதல்வருமான தளபதி குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. 

எல்லா கட்சி கரை வேட்டியை மஞ்சள் பையில் வைத்து கொண்டு அலையும் செந்தில்பாலாஜி. தற்போது அறிவாலய அடிமை போல நடித்து ஏமாற்றி கொண்டு இருக்கிறார். விரைவில் பனையூர் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலக வாசலில் கூட வந்து நிற்பார். அதற்காக இவர் எந்த கூச்சமும் பட மாட்டார். என்ன மாயாஜால வித்தை செய்தாலும், கரூர் கம்பெனி முதலாளி அமைச்சராக இருந்து செய்த தில்லு முல்லுகளில் இருந்து தப்பிக்க முடியாது. சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”