கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை விடுதலை செய்யக்கோரி கயத்தாறில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்
கவின் செல்வகணேஷ் (24) காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் போலீசார் கொலையை விசாரித்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை முதலில் கைது செய்தனர். பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக பணி புரிகின்றனர். இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் பெற்றோர்களும் இந்த கொலையில் உடந்தையாக இருந்ததாக கூறி முதல்கட்டமாக தந்தை சரவணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் உறவினர் ஜெயபால் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின்பு நேற்று முன்தினம் சுர்ஜித்தின் தாயாரும், உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியின் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி நிறுவனர் இசக்கி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.