கோவில்பட்டி: தாய்பால் கொடுத்தால்தான் குழந்தைகள்  நலமாக இருப்பார்கள். கோவில்பட்டியில்  நடைபெற்ற  உலக தாய்ப்பால் வார விழாவில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சூர்யா தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி  உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. 2026ம் ஆண்டிற்கான கருப்பொருள் வாழ்க்கைக்கு நிலையான தொடக்கம்,தாய்ப்பாலுக்கு பலன் சேர்க்கும் செயல்களை மேலும் வலுப்படுத்துவோம் என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  கோவில்பட்டி 
ரோட்டரி சங்கம், சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டு  பேசுகையில்  இன்றைய இளைய தலைமுறையினர் அழகு கெட்டுப் போய்விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. குழந்தை பிறந்து ஆறு மாதம் கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு  தாய்பால் கொடுத்தால்தான் குழந்தைகள்  நலமாக இருப்பார்கள் என்றார்.

இதையெடுத்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் சூர்யா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி முன்பு தொடங்கிய பேரணி  லட்சுமி மில் மேம்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று பயனியர் விடுதி வந்தடைந்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி கலந்து கொண்டனர்.

Related

“இருபாலர் தங்கும் விடுதிக்கு தடை விதிக்க வேண்டும் - ஐடி விடுதி உரிமையாளர் நல சங்க தலைவர் சீத்தாராமன் வலியுறுத்தல்!”