கிருஷ்ணகிரி,ஆக.1- ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதற்கு களமிறங்கிய மர்ம நபர்களின் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

ஓசூர் பிருந்தாவன் நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த 28 ஆம் தேதி  நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள்  ட்ரவுசர் மற்றும் முகமூடி அணிந்து கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட புகுந்துள்ளனர். திருடர்களின் நடமாட்டத்தை பார்த்த தெரு நாய்கள் கூட்டம் அவர்களை நோக்கி சப்தமிட்டு குறைத்துள்ளன. அப்பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து திருடுவதற்காக வந்த அந்த மர்ம நபர்கள் அங்குள்ள பல்வேறு தெருக்களில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்துள்ளனர்

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஒவ்வொருவராக நுழைந்த மர்ம நபர்கள் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் மீது துணியை பொருத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் நள்ளிரவில் தெரு நாய்களின் சப்தம் அதிகமாக கேட்டதை அறிந்த குடியிருப்பு வாசிகள் காலையில் குடியிருப்பு பகுதியில் ஏதேனும் நடந்துள்ளதா புதிதாக யாராவது வந்துள்ளார்களா என்பதை ஆராய அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளனர். அப்போது கேமராவில் பதிவான திருடர்களின் நடமாட்டத்தை பார்த்து அப்பகுதியினர் பேரதிர்ச்சி அடைந்தனர். ஓசூர் பகுதியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இது போன்று மர்ம நபர்கள் நள்ளிரவு நேரங்களில் நுழைந்து பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. இதனை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி தடுக்க வேண்டும் என ஓசூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

“சட்டத்துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்”