கிருஷ்ணகிரி: காவிரி நதிநீர் பிரச்சனையை எப்படி கையாளுவது என முதலமைச்சருக்கு தெரியவில்லை. அவதூறு வழக்குகளில் கைது செய்து எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறையை அரசு மேற்கொள்கிறது என கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நெல் பயிருக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்துவது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் ராகி கடலை போன்ற மானாவாரி பயிர்களுக்கும் காப்பீடு திட்டம் கொடுத்திருக்க பட வேண்டும். ஆனால் தமிழக அரசு விளம்பரத்தை கொடுத்து விட்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவில்லை. ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயிர் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக மா சாகுபடி செய்யும் விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மா விவசாயிகள் கோரிக்கை ஒரு கிலோவிற்கு ஐந்து ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். வேளாண் துறை நிதிநிலை அறிக்கையில் மானிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுடன் இணைந்து அதிமுக வலியுறுத்துகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் தண்ணீர் இல்லாத சமயங்களில் தமிழக அரசு கர்நாடகா அரசிடம் பேசி தண்ணீரை பெற வேண்டும். அப்படி இல்லை எனில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகி தண்ணீர் பெற வேண்டும். ஆனால் தமிழக முதலமைச்சருக்கு அனுபவம் இல்லாத காரணத்தினாலும், முதலமைச்சருக்கு கருத்துக்களை அலுவலர்கள் சொல்லாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மா பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாங்கனிகள் முழுவதும் கணக்கீடு செய்து அரசு அறிவித்த ஒரு கிலோவுக்கு நான்கு ரூபாய் மானியத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஐந்து ரூபாய் மானியம் வழங்க வேண்டும். வேளாண் துறை நிதி நிலை அறிக்கையை திருப்பதி கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்தது தவறு இல்லை ஆனால் அந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பால் பார்க்கிற நல்ல செய்தியாக இருந்தால் மகிழ்ச்சி.
கடந்த கால திமுக அதிமுக ஆட்சியில் பல்வேறு அவதூறு வழக்குகள் போடப்பட்டது. ஆனால் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது தமிழக வெற்றி கழக ஆட்சியில் அவதூறு வழக்குகளில் கைது நடவடிக்கையை எடுக்கப்படுகிறது. அரசின் இந்த போக்கு எதிர்க்கட்சி மீதான அடக்குமுறை காட்டுகிறதா என்கிற கேள்விக்கு, ஆரம்பம் முதலில் முதலமைச்சர் தங்களின் குணத்தை காட்டுகிறார். அந்த முதலமைச்சர் விஜய்க்கும் நாவடக்கம் வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது. அதே அளவிற்கு இன்றைய முதலமைச்சர் சினிமாவில் ரசிகர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக பேசும் வாசகங்களை முதலமைச்சராக இருந்து கொண்டு பேசக்கூடாது.
உதயநிதி ஸ்டாலின் வளர்ந்து வரும் ஒரு அரசியல் தலைவர். ஏற்கனவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் செயல்பட்டு உள்ளார். பொது மேடையில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளை தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது. அதற்கான பண்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேண்டும். ஆனால் உடனடியாக எதிர் கட்சிகளை எந்த விதத்திலும் செயல்படக் கூடாது என்கிற நிலையில் பயம்படுத்துகின்ற வகையில் இன்றைய முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அதை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காரணம் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குளியல் அறைக்கு சென்று வாருங்கள் என்று காவல் துறையினர் அழைக்கிறார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு இந்த அதிகாரத்தை முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் அரசியலாக பார்க்காமல், அனுபவம் இல்லாத முதலமைச்சருக்கு நாம் அனுபவத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என தெரிவித்திருந்தார். அப்படி செய்திருந்தால் காவிரி பிரச்சனையில் எப்படி அணுகலாம் என்பதை அனுபவத்தை சொல்லி இருப்பார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதை மதிக்கவில்லை யாரையும் முதலமைச்சர் மதிப்பதில்லை. கர்நாடகா முதலமைச்சர், பாஜக காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர், எடியூரப்பா சித்தராமையா,ஜெடிஎஸ் கட்சி குமாரசாமி ஆகியோரை உடன் வைத்து சிறப்பாக செயல்படுகிறார். தமிழகத்தில் நாங்கள் ஒற்றுமையாக வருகிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இடம் சொன்னால் அவர் கேட்பதில்லை தான் தோன்றித்தனமாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டினர்.
காவேரி பிரச்சனையில் முதலமைச்சர் விஜய்க்கு எப்படி கையாளுவது என தெரியவில்லை, நீர்வளத்துறை அமைச்சராக இருந்த புஸ்ஸி ஆனந்த் ரசிகர் மன்றத்தில் இருந்தவர். ஆட்சி அமைத்ததும் அவருக்கென ஒரு துறை ஒதுக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி அவருக்கு என்ன தெரியும் என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.