கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

போதை பொருள்களை அழிக்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கூறுகையில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 நிரந்தர மற்றும் 6 தற்காலிக சோதனைச் சாவடிகள் மூலமாக போதை பொருள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு புகையிலையற்ற மண்டலமாக அறிவிக்கப்பட்டு, எந்தவித புகையிலைப் பொருட்களும் விற்பனை செய்யப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு, முதல் முறை ₹25,000 அபராதம், இரண்டாம் முறை ₹50,000 அபராதம், மூன்றாம் முறை ₹1,00,000 அபராதம் மற்றும் கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும்.இதுவரை விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதாலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய வழியில் உள்ளதாலும், காவல்துறையினர் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தனியார் கார்கள் மட்டுமின்றி, பேருந்துகள் மற்றும் கொரியர் நிறுவனங்களிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் புகையிலை பொருள்கள் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.