கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் மற்றும் வெளிநாட்டுப் பழங்களைச் சமவெளிப் பகுதியில் வெற்றிகரமாக விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
காஷ்மீர் மற்றும் ஊட்டி போன்ற குளிர்ந்த மலைப் பிரதேசங்களின் அடையாளமாக விளங்கும் ஆப்பிள் பழங்கள், தற்போது தமிழகத்தின் சமவெளிப் பகுதியிலும் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்குகின்றன. மதகொண்டபள்ளி, உச்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி நாராயணா என்பவரது தோட்டத்தில் தான் இந்த விவசாயப் புரட்சி நடந்துள்ளது.
சோதனை முயற்சியாக நடவு செய்யப்பட்டு, 1.5 ஆண்டுகளில் பூத்து, தற்போது தரமான சிவப்பு நிற ஆப்பிள்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. புதுமையான முறையில் பயிரிடப்பட்ட புளூபெர்ரி செடிகள், ஒன்றரை ஆண்டுகளில் அமோக விளைச்சலைத் தந்துள்ளன. 9 மாதங்களிலேயே பலன் தரும் ஆரஞ்சு மரங்களும், அதிக சாறு நிறைந்த ஹைப்ரிட் எலுமிச்சையும் நல்ல லாபத்தைத் தந்து வருகின்றன.

3 மாதங்களிலேயே பலன் தந்த கொய்யா, அத்திப்பழம் மற்றும் பட்டர் புரூட் (வெண்ணெய் பழம்) ஆகியவையும் இங்கு செழித்து வளர்கின்றன. இது பற்றி தெரிவித்த நாகராஜ், மலைப் பிரதேசங்களில் மட்டும்தான் ஆப்பிள் விளையுமா, நம்மூர் சமவெளியில் முடியாதா என்ற தேடலில் இறங்கினோம். முறையான பராமரிப்பும், நவீன விவசாய நுட்பங்களும் இருந்தால் நம்மூர் மண்ணிலும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த விளைச்சலே சாட்சி. நம் பகுதி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி... என கூறினார்
வணிக ரீதியாக அதிக லாபம் தரக்கூடிய இந்த அரிய வகைப் பழங்களின் சாகுபடி, தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமத்து விவசாயிகளிடையே புதிய நம்பிக்கையையும், பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. முறையான வழிகாட்டுதல் இருந்தால் சமவெளி விவசாயத்திலும் முத்திரை பதிக்கலாம் என்பதை விவசாயி நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இது போன்ற மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய பழங்களை இப்பகுதியில் நன்கு வளரும் என அரசு அறிந்து இப்பகுதி விவசாயிகள் இதுபோன்ற பழ வகைகளை வளர்க்க அரசு முறையான பயிற்சியும் கடன் உதவிகளும் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.