எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எட்டயபுரம் மேல ரத வீதியைச் சேர்ந்த அய்யாசாமியின் மகன் முத்துமாரி (50), அவரது மனைவி தேன்மொழி (46). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முத்துமாரி, விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி தேன்மொழி, சொக்கலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செப்டம்பர் 5ஆம் தேதி ராமநாதபுரத்தில் வசித்து வரும் தனது மகளைப் பார்ப்பதற்காக முத்துமாரி மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் இவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் காணாமல் போயுள்ளது.

100 பவுன் நகைக் கொள்ளை: மேலும், வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துமாரி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி. திபு மற்றும் எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, தலைமை ஆசிரியர் முத்துமாரி வீட்டில் காணாமல் போன பைக், பிதப்புரம் பகுதி சாலையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பைக்கைக் கைப்பற்றி எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று வீடுகளில் மர்ம நபர் பூட்டை உடைத்ததுடன், மூதாட்டி ஒருவரைச் சித்தரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தலைமையாசிரியர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் எட்டயபுரம் பகுதி பொதுமக்களை கடும் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”