கோவில்பட்டி: பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது சிலை திறப்பு விழா அவரது பிறந்த நாளான நேற்று கோலாகலமாக நடந்தது. காமராஜர் சிலையை நடிகரும், தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலை புனரமைக்கப்பட்டு, மிகப்பிரமாண்டமாக, புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில், திரைப்பட நடிகரும், லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருமான லெஜெண்ட் சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, கர்மவீரர் காமராஜர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு அன்னதானம் மற்றும் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜா, பனங்காட்டு படை கட்சியின்  நிறுவனர் ராக்கெட் ராஜா, சென்னை அயனாவரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பிரபாகரன்,  தொழிலதிபர்கள் சக்திவேல், ஆனந்தராஜ், லெஜெண்ட் சரவணன் தலைமை நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் முத்துதுரை மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி கமிட்டி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் கோவில்பட்டி பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நடந்த விழாவில், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் லெஜெண்ட் சரவணன் பரிசுகளை வழங்கினார். மேலும், காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”