கோவில்பட்டி: என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசும் த. வெ. க மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் முப்பதாயிரம் கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ள திமுகவை சேர்ந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதியை 300 ரூபாய் கூட சம்பாதிக்க விடமாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுத்து, பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார், மேலும் மு க ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார் அமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.
ஏற்கனவே அப்படித்தான் இன்னொருவர் (முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ) அந்த எண்ணத்தில் இருந்தார். ஆனால் அவர் திரும்பவும் எங்களிடம் வந்து விட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியை சீக்கிரம் ராஜினாமா செய்ய வைத்து விடுவோம் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு சர்ச்சைக்கு உள்ளான நிலையில்,

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், என்னை ராஜினாமா செய்ய வைப்போம், இவர்களும் வந்து விடுவார்கள் என்ற தோணியில் பேசி உள்ளார். அவருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது என்று தெரியவில்லை, மிரட்டும் தொனியில் பேசுவது போன்று தெரிகிறது. முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமும் பேரம் பேசியதாகவும், மிரட்டியதாகவும், அவரும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதேபோன்று தான் எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை.
நான் திமுகவை சேர்ந்தவன். எதற்கும் அஞ்சுகிறவன் கிடையாது. பேசி களங்கப்படுத்திய த. வெ. க. மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த. வெ. க. வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.